தமிழ்நாடு (Tamil Nadu)

2026-ல் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமையும்போது தி.மு.க.வின் ஊழல் வெளிவரும் - எச்.ராஜா

Published On 2024-10-04 09:32 GMT   |   Update On 2024-10-04 09:56 GMT
  • மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
  • மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நெல்லை:

நெல்லை பாஜக கட்சி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பாஜக வழிகாட்டு குழு தலைவர் எச். ராஜா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர், பிரதமருக்கு இந்த நிதியை தருவதற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய மந்திரி சபை அந்த நிதியை வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.தமிழக பா.ஜ.க இதனை வரவேற்கிறது.

தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது வரவேற்கதக்கது.

அக்டோபர் 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தி.மு.க.-வி.சி.க.வின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மதுக்கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நிறைவேற்றியது. மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என சொல்வது போலி நாடகம்.

மக்கள் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது அரசு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் செயல் இழந்து கிடக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முழுமையாக பொய்யை மட்டுமே சொல்பவர். 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோவில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை மூலம் அதனை மக்களிடம் காட்ட வேண்டும். தவறான தகவல்களை அமைச்சர் சேகர் பாபு பரப்பி வருகிறார். 2021 தேர்தலை விட 2024 தேர்தலில் தி.மு.க. 6 சதவீத வாக்கை இழந்துள்ளது. 2026-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது தி.மு.க.வின் ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News