தமிழ்நாடு (Tamil Nadu)

தேசிய கீதம் பாட தெரியாதவர்கள் பேசுவதா?- கனிமொழி எம்.பி.க்கு அண்ணாமலை பதிலடி

Published On 2023-04-28 04:57 GMT   |   Update On 2023-04-28 04:58 GMT
  • தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்.
  • அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி.

சென்னை:

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா பகுதியில் தேர்தல் பிரசார மாநாடு நடந்தது.

இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். மாநாடு தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.

உடனே ஈசுவரப்பா அந்த பாடலை நிறுத்த சொல்லி முதலில் கன்னட தாய் பாடலை போடும்படி தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி.கனிமொழி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில் 'தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார்' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நமது தேசிய கொடியை ஏற்றியபின் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்பது தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

'கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்' என்ற வரியையே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.

மேலும் அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈசுவரப்பா சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

அத்துடன் அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி விட்டு மரியாதை செலுத்தாமல் சென்ற வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News