சென்னை சாலைகளில் கவனமாக செல்லுங்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.
சென்னை:
சென்னை மாநகர சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான சாக்கடை மூடிகள், வேகத் தடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2 மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் சாலைகளில் மேற் கொண்ட ஆய்வில் 201 இடங்களில் ஆபத்தான வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
205 இடங்களில் சாக்கடை குழி மூடிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. வேகத் தடைகள் 10 செ.மீ. உயரம், 12 அடி அகலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் 201 இடங்களில் இந்த விதிகளை மீறி வேகத் தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 40 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட வேண்டிய அறிவிப்பு பல கைகளும் சாலையில் நிறுவப்படாமலே இருக்கிறது.
இதுபோன்ற காரணங்களாலேயே இந்த வேகத் தடைகள் உயிருக்கு ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதே போல் சாக்கடை குழி மூடிகள் மற்றும் சாலையில் உள்ள மழை நீர் வடிகால் குழிகளும் பல இடங்களில் சாலை அளவை விட கீழே உள்ளது. இந்த குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறியுள்ளன.
சாலை உயரத்தை அதிகரிப்பதும் இந்த மூடிகளை சாலை அளவில் வைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மூடிகள் சாலை உயரத்தைவிட அதிகமாகி விபத்துக்கு காரணமாகி உள்ளது.
இதே போன்று 61 இடங்களில் உள்ள சாக்கடை கால்வாய்களும் ஆபத்தானவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள அந்த மனுவில் விபத்துக்கு காரணமாக இருக்கும் வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.