கல்குவாரியில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் உடல் மீட்பு
- கல் குவாரி குட்டையில் குளிக்க சென்ற விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
- 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
வண்டலூர்:
தருமபுரி மாவட்டம் கோபிநாத் பட்டியை சேர்ந்தவர் விஜய் சாரதி(வயது19). இவர் பொத்தேரியில் தங்கி அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமாலை விஜய்சாரதி மற்றும் உடன் படிக்கும் நண்பர்களான உடுமலைப் பேட்டையை சேர்ந்த தீபக் சாரதி(20), தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்(19) உள்பட 5 பேருடன் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரிகுட்டையில் குளிக்க சென்றனர். அப்போது விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும் 3 மாணவர்க ளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கல்குவாரி குட்டையில் மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது விஜய் சாரதி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.