அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் மிக மிக கடுமையாக இருக்கும்- வானிலை ஆய்வு மையம்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் இருக்கும்.
- கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 8-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வரையும் இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிக மாக வெயில் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-106.52 , சேலம்-105.08, பரமத்திவேலூா்-104.9, திருப்பத்தூா்-104.36, தருமபுரி-104 , திருச்சி-103.82, நாமக்கல்-103.1 , வேலூா்-103.1, மதுரை நகரம்-102.56, திருத்தணி-102.56, கோவை-101.84, மதுரை விமான நிலையம்-101.84 , தஞ்சாவூா்-101.3, சென்னை மீனம்பாக்கம்-100.58, பாளையங்கோட்டை-100.4.
இதற்கிடையே வருகிற 8, 10 ஆகிய தேதிகள் வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.