தமிழ்நாடு

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நில அதிர்வா?- பொதுமக்கள் பீதி

Published On 2024-09-22 08:34 GMT   |   Update On 2024-09-22 10:53 GMT
  • நில அதிர்வு பீதியால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
  • தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளன.

இதில் அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, அண்ணா நகர், வைராவி குளம், மணிமுத்தாறு, ஆலடியூர், ஏர்மாள்புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று நண்பகல் 11.55 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.

ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து தெருக்களில் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், அதனை தாங்கள் உணர்ந்ததாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். மேலும் வி.கே.புரம் அருகே உள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சில வீடுகளில் மேலே உள்ள சிலாப்புகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

இதே போல் அம்பையை அடுத்த வி.கே.புரத்தில் பட்டாசு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மன்னார்கோவில் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முக்கூடல் மற்றும் சுத்தமல்லி வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தகவல்கள் பரவலாக வெளியாகி வருகிறது. சுத்தமல்லியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டுக்குள் ஓடிச் சென்று தங்களது பெற்றோரிடம் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலும் நண்பகலில் திடீர் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். அங்கு வீடுகள் பயங்கர சத்தத்துடன் குலுங்கியதாக கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெரும்பாலான கிராம பகுதிகளில் திடீரென உணரப்பட்ட இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அச்சத்துடன் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து ஏராளமான குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இது போன்ற நில அதிர்வுகள் ஏற்படுவதாக தங்களது பல்வேறு கருத்துக்களை கூறி விவாதித்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News