அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
- 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கிட் திவாரி தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கிட் திவாரி தரப்பில் அவரது வக்கீல் செல்வம் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் செல்வம் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுராதா இந்த வழக்கு குறித்து மேல்நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவேதான் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காந்தி, செல்வம் ஆகியோர் ஆஜராகி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பல வழக்குகள் சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்பதற்கான வாதங்களை முன் வைத்தனர்.
இது தொடர்பான 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் வழங்க கூடாது என்பதற்கான உத்தரவு நகல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்ததால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி அங்கிட் திவாரி மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார். 2-வது முறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.