தமிழ்நாடு (Tamil Nadu)

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்த 5 நாளில் ஜிப்லைன் பழுது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-10-12 21:45 GMT   |   Update On 2024-10-12 21:45 GMT
  • தி.மு.க. அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
  • இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து அலறினர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

தி.மு.க. முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க. அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது தி.மு.க. அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது தி.மு.க. அரசு.

பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News