தவெக-வில் இணைகிறாரா ராமச்சந்திரன்? இபிஎஸ் பதில்
- அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
- அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.
சேலம்:
சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.
கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?
பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.
கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?
ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.
கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?
ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.
கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?
ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.
நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.