நிவாரண நிதியில் பாராமுகம்- அவங்க 2 பேருமே ஒன்றுதான்!
- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது.
- நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
எடப்பாடி:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தற்போது நிஜாம் புயல் பாதிப்புக்காக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியா என கருத்து கூற இயலாது. காரணம் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள் தமிழக அரசின் கையில் உள்ளது. இதை அவர்கள் தான் கேட்டு பெற வேண்டும். இதே போல் கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோது மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்த காலக்கட்டங்களில் மத்திய ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க.வும், இது குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. தற்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் மேட்டூர் அணை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் தூர்வாரபடாத காரணத்தினால் கடந்த காலங்களில் பெய்த மழைநீரின் பெரும் பகுதி வீணாக கடலில் கலந்தது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடி பராமரித்து திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு மீதமுள்ள 8000 ஏரிகளை தூர்வாரி இருந்தால் கோடையை சமாளித்து இருக்கலாம்.
தற்போது தமிழக்தில் பல்வேறு இடங்களில் போதை பொருட்களின் புழக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதை நான் பல முறை சட்டமன்றத்திலும், பொது வெளிகளிலும் வலியுறுத்தியும் தி.மு.க. அரசு இதை கண்டு கொள்ளாததால் தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட விரும்பதகாத நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.
இதற்கு உதாரணமாக அண்மையில் சென்னையில் உள்ள கணபதி நகர் என்ற பகுதியில் போதை ஆசாமிகள் 3 பேர் வெறியாட்டத்தில் ஈடுபட்டதையும், அதை தடுக்க இயலாத காவல்துறையின் செயல்பாடுகளும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து தி.மு.க. ஆட்சியின் மெத்தன போக்கால் தமிழகம் பின்நோக்கி செல்கிறது. மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கருத்து கூற இயலாது என்று பதில் அளித்தார்.
மேலும் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. ஏதேனும் தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வந்த பிறகே முடிவு எடுக்கப்படும். மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க.வின் கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, முடிவு வந்த பின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.