தமிழ்நாடு

மாணவர்கள், இளைஞர்கள் போதையில் சீரழிகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2024-08-11 09:09 GMT   |   Update On 2024-08-11 09:09 GMT
  • பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன்.
  • தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.72.85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

நான் முதல் முதலாக 1989-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. இதனால் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் அன்று முதல் இன்று வரை உங்களோடு, உங்கள் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட சுமார் 1809 வாக்குகள் 4 பூத்களில் கூடுதலாக தந்து இருக்கிறீர்கள். ஆகவே இப்போதும் ஆலச்சம்பாளையம் என்றால் அ.தி.மு.க.வுடைய கோட்டை என்பதை பல தேர்தல்களில் நிருபித்து காட்டியிருக்கிறீர்கள்.

ஆகவே தான் நீங்கள் எப்போதும் ஆலச்சம்பாளையம் அழைத்தால் ஓடோடி வந்து சந்திக்கிறேன். இந்த ஆலச்சம்பாளையத்தில் என்னுடைய பாதம் படாத இடமே கிடையாது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் எனக்கு தெரியும். என்னால் முடிந்த நன்மைகளை இந்த பகுதிக்கு செய்து கொடுத்துள்ளேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி, உங்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சரி எடப்பாடி தொகுதியில் பல்வேறு நன்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.


ஆனால் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்ததாலும் போதை பொருள் விற்பனை. இளைஞர்கள், மாணவர்கள் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி கஞ்சா பயன்படுத்துவது அதிகமாகி இன்றைக்கு கெட்டுபோகின்ற சூழ்நிலையில் அவர்களுடைய வாழக்கையை சீரழிந்து போகின்ற நிலையை இந்த ஆட்சியில் தான் பார்க்க முடிகிறது. பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன். சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். ஆனால் இந்த அரசால் இதை தடுக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கிடைக்கின்றது.

தமிழகத்தல் எவ்வளோ பிரச்சனை இருக்கிறது. அதையொல்லாம் சரி செய்ய இந்த அரசாங்கத்திற்கு மனமில்லை.

நீங்கள் எத்தனை கார் பேர் வைத்து இருக்கிறீர்கள். கார் பந்தயம் தமிழ்நாடுக்கு தேவையா? பந்தயத்திற்காக ஏற்கனவே அம்மா இருக்கின்றபோது இருங்காட்டுகோட்டையில் பிரமாண்டமாக கார் பந்தயம் நடத்துவதற்கு ஒரு மைதானம் அமைத்து கொடுத்து இருக்கிறோம். அங்கு கார் பந்தயம் நடத்தலாம். அதைவிட்டு விட்டு ஏழை, எளிய மக்கள் வரி பணத்தில் சுமார் 42 கோடி ரூபாய் செலவில் இன்று மாநகரத்தில் மைய பகுதியில் மருத்துவமனை, ரெயில் நிலையம், தலைமை செயலகம் இருக்கின்ற இடத்தின் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா?. இது அவசியமா? சிந்தித்து பாருங்கள். எப்படியெல்லாம் மக்களுடைய வரிபணம் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைய இருக்கிறது அதற்கு இந்த பணத்தை செலவிடலாம். அதை விடுத்து விட்டு கார் பந்தயம் நடத்துவதற்கு தி.மு.க. அரசின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை விளையாட்டாக செய்து கொண்டிருக்கிறார். இது வேதனை அளிக்கின்றது.

மக்களுடைய பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதுதான் ஒரு நிர்வாக திறமையுள்ள அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. விசைத்தறிதொழில் நலிவடைந்து விட்டது. இந்த விசைத்தறி தொழிலுக்கு தேவையான நிதி ஒதுக்கி மீண்டும் அந்த தொழில் சீரடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரிசி விலையும் உயர்ந்து விட்டது. ஒரு கிலோ அரிசி ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இப்படி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News