ஊரப்பாக்கம் அருகே வயதான தம்பதி தற்கொலை- கடன் தொல்லை காரணமா?
- இன்று காலை நீண்டநேரம் ஆகியும் கருத்தோவியன்-மஞ்சுளா ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
- கருத்தோவியனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்து வந்தவர் கருத்தோவியன்(வயது67). இவரது மனைவி மஞ்சுளா (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கருத்தோவியனும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை நீண்டநேரம் ஆகியும் கருத்தோவியன்-மஞ்சுளா ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் வசிக்கும் அவர்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குள்ள அறையில் தந்தை கருத்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், தரையில் தாய் மஞ்சுளா வாயில் நுரை தள்ளியபடியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. தந்தையும் தாயும் இறந்து கிடப்பதை கண்டு மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த தம்பதி மகளிர் குழுவில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. வருமானம் போதிய அளவில் இல்லாததால் அவர்கள் கடனை திருப்பி கொடுக்க சிரமம் அடைந்தனர். மேலும் இருவருக்கும் உடல்நிலை பாதிப்பும் இருந்து வந்தது.
கருத்தோவியனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரது மஞ்சுளா நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதி அடைந்தார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் தற்கொலை செய்து உள்ளனர். மஞ்சுளா அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கணவன்-மனைவி இருவரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.