இன்று முதல் மின்சார ரெயில் சேவை குறைப்பு- பயணிகள் எப்படி சமாளிக்க போகிறார்கள்?
- விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையே ஸ்தம்பித்து போனது.
- பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
சென்னை:
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் நேற்று 2-வது நாளாக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ரெயில் ரத்து செய்யப்பட்டதை அறிந்த பயணிகள் அதிக அளவு தங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றனர். தாம்பரம் பஸ் நிலையத்தில் வழக்கம்போல பரபரப்பாக காணப்பட்டது. மேலும், பல்லாவரம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் மற்றும் தியாகராய நகர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல, சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம் போன்ற ரெயில் நிலையங்களில் சிறப்பு ரெயிலுக்காக அதிக அளவு பயணிகள் காத்துகிடந்ததை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், இன்று (5-ம் தேதி) தொடர்ந்து 3-வது நாளாக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. கடந்த 23-ம் தேதி முதல் நேற்று வரையில் விடுமுறை நாட்களில் மட்டுமே பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இன்று (திங்கட்கிழமை) வேலை நாட்களில் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையே ஸ்தம்பித்து போனது. கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டாலும், ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் கூட்டத்திற்கு பஸ்கள் இடம் எவ்வாறு போதும் என்ற அளவிற்கு கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். ரெயில் பயணிகளுக்கு விடுமுறை நாள் மிகவும் மோசமான நாளாக அமைந்தது.
இது ஒருபுறம் இருக்க, இன்று வேலை நாள் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் என காலை முதலே ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதும். ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் வேறு வழி இன்றி பஸ் நிலையங்களை நோக்கி படையெடுப்பார்கள். பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ரெயில் ரத்து செய்யப்படுவதால் சில ரெயில் பயணிகள் தங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்ல இருப்பார்கள். இதனால் புறநகர் பகுதியில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதுவரையில் விடுமுறை நாட்களிலே பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இன்று வேலை நாள் சொல்லவா வேண்டும். இன்று மட்டும் இன்றி தொடர்ந்து வரும் 14-ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. பயணிகளின் நலனுக்காக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது பயணிகள் அனைவரும் தொடர்ந்து இதே அவதி நிலையில்தான் பயணம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் என்ன தீர்வு கொடுக்கும் என பயணிகள் தங்கள் ஆதங்கங்களை எதிர்பாா்ப்பாக வைத்து காத்திருக்கின்றனர்.