உடுமலை அருகே யானை தாக்கியதில் மாடு பலி
- காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.
- யானை தாக்கியதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியது. இதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.
இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.