ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி
- விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
- தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.
இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.
இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.
எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.