தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பல கிலோமீட்டர் தூரம் அதிர்வு

Published On 2024-09-28 03:52 GMT   |   Update On 2024-09-28 03:52 GMT
  • ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
  • வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள் தேவையான மருந்தை அதகளவில் வாங்கி இருப்பு வைப்பது வழக்கம்.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சாத்தூர் அருகே உள்ள முத்தல் நாயக்கன்பட்டியில் திருமுருகன் என்ற பெயரில் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்று இந்த ஆலை வளாகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது.

சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் பேன்சி ரக பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்புக்காக வெடி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் வேலையை முடித்து விட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனால் எழுந்த வெண்ணிற புகைமூட்டம் விண்ணை தொடுமளவுக்கு இருந்தது. அடுத்தடுத்த எழுந்த பயங்கர சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

வெடிவிபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அவர்களால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக முன்னேற்பாடாக மருந்து கலவை தயாரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது உராய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தில் பட்டாசு ஆலையே அடையாளம் தெரியாத வகையில் தரைமட்ட மாகியது.

சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர், வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். முழுமையாக வெடிகள் வெடித்து பின்பு தான் விபத்து பகுதிக்கு செல்ல முடியும் என்பதால் உயிர்பலி குறித்து உடனடியாக தெரியவில்லை.

Tags:    

Similar News