பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள்-பட்டாசுகள் பறிமுதல்: 9 பேர் மீது வழக்குப்பதிவு
- பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
- உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
நீடாமங்கலம்:
கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.