என் கணவர் பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே? பெலிக்ஸ் மனைவி அரசுக்கு கேள்வி
- அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
- பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட வழக்கில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளி கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்னும் தமிழ்நாடு அழைத்து வரப்படாததால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என் கணவரை கடந்த வெள்ளிக் கிழமை (மே 10) இரவு தொடர்பு கொண்டேன். தொலைபேசியில் சிலமுறை அழைப்பு விடுத்தும் போனை எடுக்காத அவர், ஒருக்கட்டத்தில் எனது அழைப்பை ஏற்று, தன்னை காவலர்கள் பிடியில் எடுத்துள்ளனர் என்று மட்டும் கூறிவிட்டு போனை அருகில் இருந்த காவலரிடம் கொடுத்துவிட்டார்."
"அலைபேசியில் என்னிடம் பேசிய போலீசாரிடம் எதற்காக என் கணவரை கைது செய்துள்ளீர்கள்? எப்போது, எந்த ஊருக்கு அழைத்து வரவுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் மறுநாள் காலை ரெயில் மூலம் அவரை திருச்சி அழைத்து வர இருப்பதாக தெரிவித்தனர். மறுநாள் காலை தொடர்பு கொண்ட போது காலை ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினர். அதன்பிறகு பலமுறை அழைப்பு விடுத்தும் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை."
"எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்? எங்கு அழைத்து சென்றனர்? என்ன செய்ய போகின்றனர்? என்பது குறித்து எனக்கு எவ்வித தகவலும் யாரும் கொடுக்கவில்லை. என் கணவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. தமிழக அரசு இது தொடர்பாக எனக்கு உதவி செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.