ராமேசுவரத்தில் 2 நாட்கள் நடந்த மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
- காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
- ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினா். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 151 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 8-வது நாளை எட்டி உள்ளது.
இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8-வது நாளாக நேற்று மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏ.வின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், கடந்த 2 நாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதேபோல் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.