தனியார் பள்ளி வகுப்பறையில் சிமெண்டு பெயர்ந்து விழுந்ததில் 5 மாணவர்கள் காயம்
- மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
- இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூரை அடுத்த கோவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் உள்ள யூ.கே.ஜி. வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் 5 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்திருப்பதை கண்டு அவர்களது பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மாங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.