ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 2 தரைப்பாலங்கள் மூழ்கின
- ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- ஆரணி மற்றும் பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரியபாளையம்:
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் ஆந்திரா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் கலக்கும்.
இந்த நிலையில் ஆந்திரா பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்ய பலத்த மழையால் பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய 2 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
தரைப்பாலங்களுக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கிறார்கள். இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும்,வேலைக்கு செல்வோரும் கடும் அவதி அடைந்தனர்.
அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.