ஆம்னி பஸ்களுக்கு ரூ. 1,47,500 அபாரதம் வசூல்: வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
- அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
- வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
சென்னை போக்குவரத்து ஆணையர் ஆயுதபூஜை தொடர் உட்பட விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்து சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிககட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து 18ந்தேதி முதல் ஆம்னி பஸ் சிறப்பு தணிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் ஆகியோர் தொடர் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில் அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 பிற மாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு குறைவாக வரி செலுத்தி இயக்கிய 3 ஆம்னி பஸ்களுக்கு உடனடியாக வரி வசூலிக்கப்பட்டது.
இவ்வாகன சோதனையில் அரசுக்கு மொத்தம் ரூ.1,47,500- (ரூபாய் ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.