உடுமலை வனச்சரகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு- வனத்துறை அதிகாரிகள் தகவல்
- 4 வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
- வன ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்களை கொண்டு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. இந்த நான்கு வனச்சரகங்களிலும் ஆண்டுதோறும் கோடை கால மற்றும் குளிா்கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, இந்த நான்கு வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி கணக்கெடுப்பாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட உதவி வனப்பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:-
உடுமலை, அமராவதி உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி, செந்நாய் மற்றும் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் எனப் பிரிக்கப்பட்டு வாழ்விட சூழல் கூறுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட உள்ளது.
வன ஊழியா்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்களை கொண்டு இந்த கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உடுமலை வனச்சரகத்தில் மானுப்பட்டி பிரிவு கொட்டையாறு சுற்றில் ஜல்லிமுத்தாம் பாறை மற்றும் உலிவையாறு ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது வன விலங்குகள் கணக்கெடுப்புக்கு சென்றபோது தெரியவந்துள்ளது என்றாா்.