சென்னையில் அதிரடி வேட்டை- கஞ்சா விற்பனை செய்த 3 சிறுவர்கள் சிக்கினர்
- தரமணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த பிலால்மியா என்ற வாலிபர் பிடிப்பட்டார்.
- வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரிகரன், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
சென்னை மாநகரில் போதை பொருட்களை தடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குணசேகர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தரமணி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த பிலால்மியா என்ற வாலிபர் பிடிப்பட்டார். இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3650 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஹரிகரன், அஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மடிப்பாக்கம் ஐயப்பா நகர் பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மகாவீர் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 105 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களை தவிர கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதை தடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.