தமிழ்நாடு

சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்- தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்

Published On 2024-02-06 09:42 GMT   |   Update On 2024-02-06 09:42 GMT
  • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
  • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News