தமிழ்நாடு

ஏப்ரல் 14-ந்தேதி முதல் அண்ணாமலைக்கு போட்டியாக காயத்ரி ரகுராம் பாத யாத்திரை

Published On 2023-01-24 06:15 GMT   |   Update On 2023-01-24 06:15 GMT
  • அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.
  • அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

அவருக்கு போட்டியாக பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமும் பாதயாத்திரை செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.

நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இருந்தபோது உள்கட்சி விவகாரங்கள் பற்றி கடுமையாக விமர்சித்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுதொடர்பாக நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்தார். எனது 8 வருட கடின உழைப்பு, பணம், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு தூக்கி எறிந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஜனவரி 27-ந் தேதி பாத யாத்திரை புறப்படுவதாகவும் களத்தில் சந்திப்போம் என்றும் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை தொடங்க போவதாக அறிவித்துள்ளார்.

இப்போது அவரது பாத யாத்திரைக்கு போட்டியாக காயத்ரியும் தனது பாத யாத்திரையை தொடங்க முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது.

ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது "சக்தி யாத்திரையை" ஏப்ரல் 14-ந் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம்.

அரசியல் கட்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக்கட்சியின் மாநிலத்தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News