தமிழ்நாடு

புழல் அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2024-01-13 06:29 GMT   |   Update On 2024-01-13 06:29 GMT
  • குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
  • தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

செங்குன்றம்:

சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News