தமிழ்நாடு

அரசு வீடு தர பணம் கேட்டால் 1 ரூபாய் கூட கொடுக்காதீர்கள்- துரைமுருகன்

Published On 2024-08-20 08:30 GMT   |   Update On 2024-08-20 08:30 GMT
  • கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது.
  • பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைய வழங்கி பேசினார்.

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்க்கு சிலர் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். எவனுக்கும் நீங்க ஒத்த பைசாவை தர கூடாது. ரூ.1000 உதவி தொகை வராதவர்கள் குறித்து பட்டியல் தயார் செய்து வருகிறோம். அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும். பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

சேர்காட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையும் அடுத்த மாதம் திறக்கப்படும். காட்பாடி தொகுதியில் இல்லாது என எதுவுமே கிடையாது.

எனது தொகுதிக்கு நான் எதுவும் செய்யும் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நான் மட்டும் யோகியனாக இருந்தால் போதாது.

எதிரிகளே இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள். எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, ரத்த ஓட்டமாக இருப்பது எனது கழக தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக்கொள்வேன் அது என் உரிமை.

எல்லாம் துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கருணாநிதி நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாமல் பேசுகிறார்.

இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்.ஜி.ஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா?.

கருணாநிதியை மாற்றுக் கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் மறைந்துவிட்ட தலைவர்களை கூட தாறுமாறாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காழ்ப்புணர்ச்சி காட்டக்கூடாது. தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம் அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News