செம்மொழி பூங்காவில் பிரமாண்ட மலர் கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
- கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
- மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.
சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.
இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.