தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
- கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது.
சென்னை:
தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பல மளிகை பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுவதால் அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகன செலவு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ.222-க்கு விற்கிறது. ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுந்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.110-க்கு விற்கப்பட்ட பாசி பருப்பு ரூ.120-க்கும், ரூ.72-க்கு விற்கப்பட்ட கடலை பருப்பு ரூ.84-க்கும், ரூ.82-க்கு விற்கப்பட்ட உடைத்த கடலை ரூ.102-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.77-க்கு விற்கப்பட்ட கருப்பு கொண்டை கடலை ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.
ரூ.82-க்கு விற்கப்பட்ட கடுகு ரூ.95-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட வெந்தயம் ரூ.95-க்கும், ரூ.38-க்கு விற்கப்பட்ட சர்க்கரை ரூ.44-க்கும், ரூ.88-க்கு விற்கப்பட்ட தனியா ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் சில பொருட்கள் மட்டும் விலை குறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் கிலோ ரூ.635-க்கு விற்கப்பட்ட சீரகம் ரூ.380 ஆக விலை குறைந்துள்ளது. ரூ.225-க்கு விற்கப்பட்ட சோம்பு ரூ.195 ஆகவும், ரூ.420-க்கு விற்கப்பட்ட மிளகாய் தூள் ரூ.410 ஆகவும், ரூ.360-க்கு விற்கப்பட்ட மல்லித்தூள் ரூ.340 ஆகவும், ரூ.250-க்கு விற்கப்பட்ட மிளகாய் ரூ.210 ஆகவும் விலை குறைந்துள்ளது.
மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் சமையல் எண்ணெய் விலையில் மட்டும் தற்போது எந்த மாற்றமும் இல்லை.