தமிழ்நாடு

வனப்பகுதியில் கனமழை: உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்வு

Published On 2024-06-28 05:30 GMT   |   Update On 2024-06-28 05:30 GMT
  • அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு, சிலந்தையாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 8 ராஜ வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 25-ந்தேதி நிலவரப்படி 52.96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 58.17 அடியாக உயர்ந்தது. அதன்படி 3 நாளில் அணையின் நீர் இருப்பு 5.21 அடி உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 2070 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News