தமிழ்நாடு (Tamil Nadu)

தொடரும் சாரல் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்வு

Published On 2024-05-21 05:30 GMT   |   Update On 2024-05-21 05:30 GMT
  • கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாநகரில் சில நாட்களாக பெய்த மழையால் மேலப்பாளையம், சேவியர் காலனி விரிவாக்க பகுதியான பிரைட்காலனியில் உள்ள ராஜா நகரில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அங்குள்ள 4-வது தெருவில் சாக்கடை நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 51.10 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.81 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 62.80 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரு அடி உயர்ந்துள்ளது.

கன்னடியன் கால்வாய் பகுதியில் அதிகபட்சமாக 9.8 மில்லி மீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, களக்காடு, அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர், ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், காக்காசியில் 7 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான சிவப்பு மழை எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு நிற எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்த நிலையில் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 11.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

செங்கோட்டை, ஆய்க்குடியில் தலா 5 மில்லி மீட்டரும், அணை பகுதிகளான ராமநதி மற்றும் கடனாவில் தலா 2 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், சிவகிரி, புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஒரு மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூரன்குடி பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News