தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

Published On 2024-07-13 08:09 GMT   |   Update On 2024-07-13 08:09 GMT
  • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.
  • தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சில இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. களக்காடு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 1.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடையம் அருகே உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 11 மில்லிமீட்டரும், கடனா அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

மேலும் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லிமீட்டரும், குண்டாறில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 76 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 55.30 அடியாகவும், கருப்பாநதி அணை 47.73 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையில் 95.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.

தென்காசி நகர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே நகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடியில் நேற்று மாநகர பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாநகர பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. கீழ அரசடி பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags:    

Similar News