பலத்த காற்றுடன் கனமழை : வயலில் தண்ணீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.