சென்னையில் 'ஹோலி' உற்சாக கொண்டாட்டம்- ஒருவருக்கொருவர் வண்ண கலர்பொடி பூசி மகிழ்ச்சி
- சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர்.
சென்னை:
அன்பை பரிமாறக்கூடிய ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வடமாநிலத்தவர்கள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டி கையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற அடிப்படையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று காலையில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியில் வந்து ஹோலியை கொண்டாடினர்.
வாலிபர்கள், இளம்பெண்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கலர் பூசினர். கார், மோட் டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களில் சென்றும் வீதிகளில் ஆரவாரமாக கொண்டாடினர்.
காலையில் இருந்து மதியம் வரை ஒருவரையொருவர் விரட்டி சென்று வண்ண கலர் பொடிகளை பூசினர். சென்னையில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் ஒருவருக்கொருவர் நேரிலும், போனிலும் ஹோலி வாழ்த்துக்களை கூறி அன்பை வெளிப்படுத்தினர். சிலர் கட்டிப்பிடித்து ஆட்டம், பாட்டத்திலும் ஈடுபட்டனர்.