தமிழ்நாடு

பூத்தில் இருக்கவே ஆட்கள் இல்லை: அண்ணாமலை கோவையில் எப்படி வெற்றி பெறுவார்? கே.எஸ்.அழகிரி

Published On 2024-05-12 04:56 GMT   |   Update On 2024-05-12 04:56 GMT
  • தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.
  • ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

சென்னை:

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரான கே.எஸ்.அழகிரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றி பெறும். அதற்கு காரணம் கூட்டணி வலிமை.

ராகுல், மு.க.ஸ்டாலின் மிகவும் வெற்றிகரமாக தேர்தல் பணியை முன்னெடுத்தார்கள். மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, பஸ்களில் இலவச பயணம், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் சம்பள உயர்வு ஆகியவையும் ராகுல் அறிவித்துள்ள பெண்களுக்கு ரூ.1 லட்சம் போன்ற திட்டங்கள் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 99 சதவீத பெண்கள் ஆதரவு இந்த கூட்டணிக்குத்தான் கிடைக்கும் என்பதை மறுக்க முடியுமா?

எதிர்கட்சிகள் சிதறி கிடக்கின்றன. ஆக்கப்பூர்வமான உத்தரவாதங்கள் எதையும் அவர்களால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

பா.ஜனதாவால் வேரூன்ற முடியவில்லை. பிரதமர் மோடி பிரிவினை வாத அரசியலை கையில் எடுத்துள்ளார். மக்களை ஒற்றுமை படுத்துபவராக இல்லை.

தமிழக மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு போதும் மத வெறியர்களாக மாறமாட்டார்கள். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

அதற்கு காரணம் இந்த மண்வாசனை அப்படிப்பட்டது.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பா.ஜனதா தனது கணக்கை தமிழ் நாட்டில் இருந்து தொடங்கும் என்று கூறி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். பா.ஜனதாவின் நாடு தழுவிய தோல்வி கணக்கை இங்கிருந்துதான் தொடங்குவார்கள்.

அதற்கு கோவை தொகுதி ஒரு சாட்சி. அந்த தொகுதியில் பா.ஜனதாவுக்கு பூத்தில் அமர கூட ஆட்கள் இல்லை. அதனால்தான் தோல்வியை உணர்ந்து ஒரு லட்சம் ஓட்டுக்களை காணவில்லை என்றார்கள். வாக்காளர்களின் பெயர் சேர்க்க, சரி பார்க்க எவ்வளேவா அவகாசம் கொடுத்தும் ஒரு லட்சம் பெயர்கள் விடுபட்டது என்பது எப்படி சாத்தியம்?

கோவையில் அண்ணாமலையின் தோல்வி எழுதி வைக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு பா.ஜனதா தனது நிலையை உணர்ந்து கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News