தொழில்முனைவோர் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால் ரூ.15 கோடி வரை மானியம்- தா.மோ.அன்பரசன் தகவல்
- தொழிற்பேட்டையினை ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
- தொழிற்பேட்டை 65 தொழில் மனைகளுடன் வரும் 6 மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை:
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் ஒரத்தநாடு தொகுதியில் நெல், வேர்க்கடலை, கரும்பு ஆகியவை விளைவிக்கப்படுவதால், மூலப்பொருட்களாக அதனை கொண்டு செல்ல சிறு தொழில் புரிய தொழிற்பேட்டை அமைக்கப்படுமா? என ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் புதிய தொழிற்பேட்டைக்கு தேவைப்படும் நிலம் குறித்து மாவட்ட நிர்வாகத் திடம் விவரம் கோரியதில், அந்த பகுதியில் தகுதியான அரசு நிலங்கள் ஏதும் இல்லை என 13.08.2021 நாளிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரத்தநாட்டில் இருந்து 40 கி.மீ தொலைவில் பாளையப்பட்டியில் 204 தொழில் மனைகளுடன் தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது 15 தொழில் மனைகள் காலியாக உள்ளதால் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் தொழில் துவங்க முன்வரும் பட்சத்தில் இத்தொழிற் பேட்டையில் தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க 20 தொழில்முனைவோர்கள் 50 ஏக்கர் நிலத்துடன் தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில், உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, அரசு அதிகபட்சமாக ரூ. 15 கோடி வரை மானியம் வழங்கப்படும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றப்பின், திருவாரூர் மாவட்டத்தில், முதன்முறையாக ஒரத்தநாட்டில் இருந்து 50 கி.மீ தொலைவில் நன்னிலம் வட்டம், வண்டாம் பாளை கிராமத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட தொழிற்பேட்டை 65 தொழில் மனைகளுடன் வரும் 6 மாத காலத்திற்குள் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தொழிற்பேட்டையினை ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஆர்வம்மிக்க தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.