சென்னையில் நாய்க்கடியால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- இந்தியாவில் முறையாக தடுப்பூசி போடப்படாத தெரு நாய் கடிப்பதால் தான் 95 சதவீதம் ரேபிஸ் நோய் ஏற்படுகிறது.
- நாய் கடித்த அன்றே இந்த சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.
ரேபிஸ் என்பது வெறி நாய்க்கடியால் ஏற்படும் ஒருவகை நோய். ரேபிஸ் எனப்படும் வைரஸ் கிருமிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்தியாவில் முறையாக தடுப்பூசி போடப்படாத தெரு நாய் கடிப்பதால் தான் 95 சதவீதம் ரேபிஸ் நோய் ஏற்படுகிறது.
ரேபிஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் வைரஸ்கள் வாழும். அந்த நாய் மனிதர்களை கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக ரேபிஸ் கிருமிகள் உடலுக்குள் சென்று விடும்.
பின்னர் உடலில் உள்ள தசை இழைகளில் பல மடங்கு பெருகும். அதன் பிறகு நரம்புகள் வழியாகவும், முதுகு தண்டு வடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளை திசுக்களை அழித்து ரேபிஸ் நோயை உண்டாக்குகிறது.
மேலும் வெறிநாய் மனிதர்களின் மீது பிராண்டினாலும், உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தடவினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் நோய் வரலாம். வெறிநாய் காலில் கடித்தால் பாதிப்புகள் வெளியில் தெரிய அதிக நாட்கள் ஆகலாம். ஆனால் முகத்திலோ, கையிலோ கடித்தால் உடனடியாக அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு 90 நாட்கள் கழித்து கூட அறிகுறிகள் தென்படலாம். இந்த நோயின் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். அதன் தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி உருவாகும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது.
வெறிநாய் கடித்தவருக்கு தொப்புளை சுற்றி 14 ஊசிகள் போடுவது பழைய நடைமுறை. இப்போது நவீன தடுப்பூசிகள் வந்து விட்டன. 5 ஊசிகள் போட்டாலே ரேபிஸ் நோயை 100 சதவீதம் தடுத்துவிடலாம்.
இந்த தடுப்பூசிகள் தொப்புளில் போடப்படுவது இல்லை. கைகளிலேயே போடப்படுகிறது. நாய் கடித்த அன்றே இந்த சிகிச்சையை தொடங்கிவிட வேண்டும்.
நாய் கடித்த நாள், 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என 5 தவணைகள் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடுமையான காயம் இருந்தால் 6-வது தடுப்பூசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகிறது. தனியார் மருத்துவ மனைகளிலும் கிடைக்கிறது.
சென்னையில் தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாய்க்கடியால் சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு 2 பெரிய மருத்துவமனைகளில் மட்டும் தினமும் 15 பேர் வரை ரேபிஸ் தடுப்பூசி போட வருகிறார்கள்.
இதில் பெரும்பாலும் குழந்தைகளே நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள், தெரு நாய்களிடம் விளையாடும்போது அவர்கள் நாய்களிடம் கடி படுகிறார்கள்.
மேலும் குழந்தைகள் தெருக்களில் ஏதாவது உணவை எடுத்து செல்லும் போது, அருகில் உள்ள கடைகளுக்கு தனியாக அனுப்பப்படும் போதும் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். பெரியவர்கள் தற்செயலாக நாயின் வாலை மிதிப்பது உள்ளிட்ட காரணங்களால் நாயிடம் கடிபடுகிறார்கள்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி போட மாதம் 20 குழந்தைகள் வருகிறார்கள். நாய்க்கடியால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அது பொது சுகாதார பிரச்சினையாக மாறி உள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6261 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அங்கு தினமும் 5 பேர் நாய்க்கடி சிகிச்சைக்கு வருகிறார்கள். ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் ஒரு மாதத்தில் 1400 முதல் 1500 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. இங்கு தினமும் 10 பேர் சிகிச்சை பெற வருகிறார்கள்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு 1385 டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாய்க்கடி என்பது ஒரு தீவிர சுகாதார பிரச்சினையாகும். ரேபிஸ் நோய் 100 சதவீதம் ஆபத்தானது. ஆனால் அது 100 சதவீதம் தடுக்கக்கூடியது. தடுப்பூசி போடப்பட்ட நாய் கடித்தாலும், தடுப்பூசி போடாத நாய் கடித்தாலும் உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தண்டையார்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, பட்டாளம், ராயபுரம் போன்ற பகுதிகளில் நாய்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் அதிகம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.
நாய்க்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுபவர்கள் அனைத்து தவணை தடுப்பூசிகளையும் போட்டு முடிக்க வேண்டும்.
மனிதர்களுக்கு ரேபிஸ் நோயின் பாதிப்பை தடுக்க நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதே சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.