தமிழ்நாடு

மலைப்பகுதியில் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2024-08-22 06:03 GMT   |   Update On 2024-08-22 06:03 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தது
  • பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று வரை அணைக்கு வினாடிக்கு 835 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு தற்போது 2,295 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117.20 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 121.45 அடியை எட்டி உள்ளது. இந்த 2 அணை பகுதிகளிலும் இன்றும் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.50 அடி மட்டுமே இருக்கிறது.

அந்த அணைக்கு நீர்வரத்து ஏதும் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியுள்ளது.

Tags:    

Similar News