தமிழ்நாடு

அபராத தொகைக்காக ஏலம் விடப்படும் ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க நகைகள்

Published On 2024-02-25 06:43 GMT   |   Update On 2024-02-25 07:11 GMT
  • ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகையை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 4 பேரையும் நிரபராதிகள் என விடுவித்து தீர்ப்பளித்தது.

அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறி விட்டு செலுத்த வேண்டிய அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்போது கைப்பற்றியிருந்தனர். இவைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

அந்த நகைகளை ஏலம் விட்டு அவரது தொகையில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அதனை அரசு கருவூலத்தில் சேர்த்து பின்னர் நகையின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி ஏலத்தில் விட்டு பணம் திரட்டப்படும் இந்த நகைகள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.

அதனை வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதை தவிர வழக்கு கட்டணமாக 5 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாகவே முழுமையாக கட்டப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News