தமிழ்நாடு

காரைக்குடியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தையொட்டி நடைபெற்ற பாட்டுக்கச்சேரியில் பக்தி பாடலுக்கு அருள் வந்து சாமியாடிய பெண்கள்.

காரைக்குடியில் கலகலப்பு- கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பக்தி பாடலுக்கு சாமியாடிய பெண்கள்

Published On 2023-07-25 10:35 GMT   |   Update On 2023-07-25 10:35 GMT
  • சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர்.
  • கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் புதுவயல் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா புதுவயல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர். கூட்டத்தில் உள்ளவர்கள் கலைந்து செல்லாமல் இருப்பதற்காக பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருந்த பெண்கள் பலருக்கு திடீரென்று அருள் வந்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் நிலைநிறுத்த முடியாமல் எழுந்து சாமி ஆட தொடங்கினர்.

அருகில் இருந்து நிகழ்ச்சியை ரசித்த சக பெண்கள் அவர்களின் கைகளில் வேப்பிலையை கொடுத்தும், நெற்றியில் விபூதி பூசியும் அவர்களை ஆசுவாசப்படுத்தினர். ஆனால் அந்த பாடல் முடியும் வரை சாமியாடிய பெண்கள் தளரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் மேடையேறி விடுவார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அதையும் தாண்டி கழகத்தினர் உள்பட ஒருசிலர் சாமியாடிய பெண்களிடம் குறி கேட்கவும் முற்பட்டனர். கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் அருள் வந்து சாமி ஆட்டம் ஆடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News