கள்ளக்குறிச்சி வன்முறை திட்டமிட்டு நடந்ததுபோல் தெரிகிறது- ஐகோர்ட் நீதிபதி கருத்து
- மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
- சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளியின் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாகின. இது தொடர்பாக 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது, எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும் நிதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நீதிபதி கூறியதாவது:-
சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல: திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும்.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.