தமிழ்நாடு

காஞ்சிபுரம் மேயர் மீது 29-ம்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்- கமிஷனர் அறிவிப்பு

Published On 2024-07-10 02:07 GMT   |   Update On 2024-07-10 02:07 GMT
  • மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
  • மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், 49 மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் உள்ளனர்.

மாநகராட்சி மேயர் தங்களை உரிய முறையில் மதிக்கவில்லை. தங்கள் வார்டுகளுக்கு தேவையான மக்கள் நல பணிகளை செய்து தரவில்லை என அதிமுக, பாமக, பாஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை, உறுப்பினர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும், சேர்ந்து கொண்டு மேயர் மகாலட்சுமி யுவராஜுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என 33 பேர் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரி டம் மனு வழங்கி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் மேயரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.

இருப்பினும் மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாநகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32, ஆண்டு 2022) பிரிவு 51 (2) (3) படி காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்களால் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் இந்த மாதம் 29-ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்றும், மேற்படி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான கடிதங்களை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் விவரம்

மொத்தம்:- 51

திமுக - 33

காங்கிரஸ் -1

அதிமுக -8

தமாகா -1

பாமக -2

பாஜனதா -1

விடுதலை சிறுத்தைகள் கட்சி-1

சுயேச்சை -4

Tags:    

Similar News