தமிழ்நாடு (Tamil Nadu)

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2024-10-16 08:14 GMT   |   Update On 2024-10-16 08:14 GMT
  • விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
  • சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.

முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News