தமிழ்நாடு

திருவிழாவில் யானை வராதது ஏன்?- அதிகாரிகளுடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம்

Published On 2022-06-11 09:39 GMT   |   Update On 2022-06-11 09:39 GMT
  • வைகாசி விசாக திருவிழாவின்போது யானை வராததால் 10 நாட்களும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் அர்ச்சகர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே எடுத்து வந்தார்.
  • வைகாசி விசாக திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் தடிகளை எடுத்து போடுவதற்காகவும் யானையை பயன்படுத்துவது வழக்கம்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி பரிவேட்டை திருவிழா மற்றும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா ஆகியவை சிறப்பு வாய்ந்தது.

இந்த திருவிழாக்களில் 10 நாட்களும் அம்மனின் அபிஷேகத்துக்குரிய புனித நீரை விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து யானை மீது வைத்து மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம்.

இதேபோல வைகாசி விசாக திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் தடிகளை எடுத்து போடுவதற்காகவும் யானையை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவின்போது யானை வராததால் 10 நாட்களும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் அர்ச்சகர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே எடுத்து வந்தார்.

இது பக்தர்களின் மனதை வேதனை அடையச்செய்தது. திருவிழா தொடங்கி 9 நாட்கள் ஆனபிறகும் இதுவரை யானை பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி 10-ம் திருவிழாவான நாளை தெப்பத்திருவிழா நடைபெறுவதற்கு வசதியாக இதுவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதனை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பா.ஜ.க.வினர், அமைச்சர்கள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேரோட்டத்துக்கு முன்பு யானை வரும் என்று கூறினீர்களே? ஏன் வரவில்லை? தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து ஏன் நிரப்பவில்லை என்றும் சரமாரியாக கேள்வி கேட்டதோடு மட்டுமின்றி அதற்கு பதில் சொல்லி விட்டு தேரை இழுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம், அடுத்த திருவிழாவுக்கு யானை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுங்கள் என அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு அமைச்சர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தை கைவிட்டு தேரை இழுத்தனர். இதனால் சுமார் அரைமணி நேரம் தாமதமாக 7-30 மணிக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது.

Tags:    

Similar News