கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது
- கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் கடல் தொலைவில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை மக்கள் பங்கு கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து 362 பெண்கள், 65 சிறுவர், சிறுமியர் என மொத்தம் 2,193 பேர் 59 விசைப்படகுகள், 11 நாட்டு படகுகளில் கச்சத்தீவுக்கு வந்தனர்.
நேற்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அப்போது இருநாட்டு மக்களும் பங்குபெற்ற சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து 14 இடங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோர் சிலுவையை ஏந்தி ஆராதணை பாடல்களை பாடி வந்தனர். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வந்தவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றி கொண்டார்கள். இரவு தேவாலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கடல் எல்லை பகுதியில் இருநாட்டு கடற்படை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்று காலை யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இருநாட்டு மக்கள் பங்கு பெற்ற திருப்பலியில் தமிழ், சிங்கள மொழியில் ஆராதனை பாடல்கள் பாடப்பட்டது.
தொடர்ந்து உலக நன்மை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. அதன்பின்னர் கச்சத்தீவில் இருந்து பெண்கள் உள்பட 2193 பேர் இன்று மதியம் ராமேசுவரம் திரும்புகிறார்கள். முன்னதாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்திருந்தது.