தமிழ்நாடு

மீட்கப்பட்ட சிறுவனிடம் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்த காட்சி.

டியூசனுக்கு சென்ற சென்னை சிறுவன் ரெயிலில் கடத்தல்?- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மீட்பு

Published On 2023-07-04 05:31 GMT   |   Update On 2023-07-04 06:56 GMT
  • சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
  • 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அரக்கோணம்:

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.55 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

இந்த ரெயிலில் எஸ்-1 கோச் அருகில் உள்ள ஏ.சி . பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் பரிசோதனை செய்தார். அந்த பெட்டியில் சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் பயந்து மூலையில் பதுங்கி நின்றான். டிக்கெட் பரிசோதகரை கண்டதும் அழுதான்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிக்கெட் பரிசோதகர் அவரிடம் தன்மையாக பேசி சமாதானப்படுத்தினார். அதற்குள் ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அந்த சிறுவனை டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனால் இந்த ரெயில் 5 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அந்த சிறுவன் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கிரண்பாபு என்பவரது மகன் அகில் (வயது 11) என்பது தெரியவந்தது. சிறுவன் அகில் போலீசாரிடம் கூறுகையில்:-

நான் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். நேற்று மாலை டியூசன் முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த 2 பேர் என்னை மிரட்டி வாயை பொத்தி வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு ரெயிலில் சென்ட்ரல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் இந்த ரெயிலில் ஏ.சி. பெட்டியில் என்னை ஏற்றிவிட்டு சென்றுவிட்டனர். ரெயில் வேகமாக சென்றதால் என்னால் இறங்க முடியவில்லை என கூறினார்.

சிறுவனை வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். உண்மையில் அகிலை கடத்த மர்ம நபர்கள் முயற்சித்தார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசார் ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து செய்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News