தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2024-07-14 01:58 GMT   |   Update On 2024-07-14 06:35 GMT
  • சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
  • இந்த சம்பவத்தில் 11 பேரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை:

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ஒருவர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னை புழல் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த பரபரப்பான என்கவுண்டர் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை மாநகரில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவனுமான ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்து வதற்காகவே 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் குன்றத்தூரை சேர்ந்த பிரபல ரவுடியான திருவேங்கடம் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட் டிருந்தார்.

கடந்த 11-ந் தேதி முதல் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இவர்களில் ரவுடி திருவேங்கடத்திடம் போலீசார் பரங்கிலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக இன்று காலையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக் டர் சரவணன் மற்றும் போலீசார் திருவேங்கடத்தை வேனில் அழைத்துச் சென்றனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்று கொண்டிருந் தற்போது ரவுடி திருவேங்கடம் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

உடனடியாக போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய திருவேங்கடத்தை விரட்டிச் சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ரவுடி திருவேங்கடத்தை பிடிக்க தண்டையார் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். புழல் வெஜிடேரியன் வில்லேஜ் பகுதி காலி இடங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். அங்கு தகர சீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை யில் திருவேங்கடம் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கொட்டகையை சுற்றி வளைத்த போலீசார் திருவேங்கடத்திடம் சரணடையுமாறு கூறினார்கள்.

ஆனால் திருவேங்கடமோ, கொட்டகையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் இருந்து தப்பிய இன்ஸ்பெக்டர் முகமது புகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார்.

இதில் ரவுடி திருவேங்கடம் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. வலது பக்க வயிறு, இடது பக்க மார்பு ஆகிய இரண்டு இடங்களில் பாய்ந்த குண்டுகள் திருவேங்கடத்தின் உடலை துளைத்தன. இதில் சுருண்டு விழுந்த திருவேங்கடத்தை போலீசார் காப்பாற்ற முயன்றனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு திருவேங்கடத்தை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திருவேங்கடம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து திருவேங்கடத்தின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்டர் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 11 பேரில் ஒரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் மற்ற 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைகிறது. பின்னர் 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடசென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், இணை கமிஷனர் விஜயகுமார், கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டிய ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

என்கவுண்டர் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேங்கடம் போலீசாரை துப்பாக்கியால் சுடுவதற்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

மற்ற கொலையாளிகளும் இது போன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எங்கேயாவது பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் சம்பவம் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News