தமிழ்நாடு

தி.மு.க. தலைமையிலான தற்போதைய கூட்டணியை விட்டுக்கொடுக்க மாட்டோம்- கே.என்.நேரு

Published On 2024-09-05 22:00 GMT   |   Update On 2024-09-05 22:01 GMT
  • கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர்.
  • 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் இருந்தது போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு தி.மு.க. கூட்டணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக ஆனதை, சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News