கொடுங்கையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்து உற்சாகப்படுத்தும் ஆசிரியர்கள்
- சொந்த பணத்தை செலவு செய்து தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.
- காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம்.
பெரம்பூர்:
சென்னை அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கற்பித்தல், பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தனிக்கவனத்துடன் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு மற்றும் மாலையில் டிபனுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவது அனைவரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
கொடுங்கையூர், காமராஜர் சாலையில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 54 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தங்களது பள்ளி சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் பள்ளி ஆசியர்-ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்து வருகிறார்கள்.
மேலும் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தினந்தோறும் மாணவ-மாணவிகளுக்கு காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களின் காலை உணவில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்-ஆசிரியைகளே தங்களது சொந்த பணத்தை செலவு செய்து காலை உணவு வாங்கி கொடுத்து வருகிறார்கள்.
காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு காபி, டீ, மற்றும் ஒவ்வொரு நாளும் இட்லி, வடை, தோசை, சப்பாத்தி வழங்கப்படுகிறது. இதேபோல் மாலையில் டீ, பிஸ்கட், வாழைப்பழம், சுண்டல் வழங்கப்படுகிறது. இதற்கான செலவை பள்ளி ஆசிரியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சமாளித்து வருகிறார்கள்.
இவ்வளவு செய்யும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்க மாணவ-மாணவிகளும் போட்டி,போட்டு படித்து வருகின்றனர். வருகிற பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி சாதனை படைப்போம் என்று பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முனிராமையா கூறியதாவது:-
இந்த பள்ளியில் சுமார் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்து வருகிறோம். காலை 7.30 மணி முதல்9 மணிவரையும், மாலை 3.30 மணிமுதல் 7.30 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்பிப்பதால் எந்த மாணவ-மாணவிகளும் சிறப்பு வகுப்பை தவற விடுவதில்லை. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து வருகிறோம்.
காலையில் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகள் பசியோடு இருக்கக்கூடாது என்பதால் அவர்களுக்கு காபி, டீ, இட்லி, தோசை, சப்பாத்தி கொடுக்கிறோம். மாலையிலும் டீ கொடுப்போம். இதற்கான செலவை ஆசிரியர், ஆசிரியைகள் அனைவரும் பகிர்ந்து அளித்து வருகிறோம். நண்பர்கள், சமூக ஆர்வலர்களும் உதவி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் நிச்சயம் சாதனை படைப்பார்கள் என்று நம்புகிறோம். இதற்கு வகுப்பு ஆசிரியர் சுபாஷ் சந்திரன், கணித ஆசிரியர் தேவிகா ஆகியோர் உறுதுணையாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.